search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர் மாவட்டத்தை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்றுவோம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர் மாவட்டத்தை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம் நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகளை நவீன எந்திரங்களை கொண்டு ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும் சமூகசேவகருமான ராமராஜ் தமது குழுவினருடன் ராஜபாளையம் வட்டாரம் முழுவதும் இடைவிடாது மேற்கொண்டு வருகிறார்.

    சிறிய தெருக்கள் முதல் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ அணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீ அணைப்பு வீரர்களும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகயை செய்து வருகின்றனர்.

    ராஜபாளையத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் ராஜபாளையம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பாஸ்கரன், பால் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, பொறியாளர் நடராஜன், வருவாய் அலுவலர் முத்துச்செல்வம் உட்பட சுகாதாரத் துறை, கொரோனா தடுப்பு நடவடிக்கை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் பகுதியில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள துப்புரவு பணியாளர்களை களம் இறக்கி பொது ஜனங்கள் நடமாட்டம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாறுகால்களை சுத்தப்படுத்தி குப்பை கூளங்களை அகற்றி நகரையே துடைத்து எடுத்து விடவேண்டும். இதற்காக அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவுரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்ட அமைச்சர் அதனை பாராட்டினார்.

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் நவீன எந்திர செயல்பாடுகளையும் அதன் பயன்களையும் மன்ற தலைவர் ராமராஜ் விளக்கி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டத்தை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
    Next Story
    ×