search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பாலம் (கோப்புப்படம்)
    X
    மேம்பாலம் (கோப்புப்படம்)

    கொரோனா தடுப்பு நடவடிக்கை மதுரையில் மேம்பாலங்கள் மூடல்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு வடகரை தென்கரையை இணைக்கும் 6 மேம்பாலங்கள் இன்று முதல் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    உலகையே உலுக்கி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் வருகிற 14-ந்தேதி வரை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    7-வது நாளான இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதுரையிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில் காய்கறி மார்க்கெட்டுகள் மதுரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சந்தையில் பொதுமக்கள் தினமும் ஏராளமானோர் கூடுவதால் அங்குள்ள மீன் மார்க்கெட்டை நாளை முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள ஆயுதப்படை மைதானம் மதுரை கல்லூரி மைதானம் உள்ளிட்ட 10 இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

    மக்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை அளிக்க முடியும் என்று போலீசார் வேண்டுகோள் அறிவிப்புகளையும் அறிவித்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுரையில் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த வசதியாக மேம்பாலங்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் வினய், மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மதுரையை பொறுத்த வரை வடகரை தென்கரையையும் இணைக்க 10 மேம்பாலங்கள் உள்ளன. இதில் 6 மேம்பாலங்கள் இன்று முதல் அடைக்கப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:-

    குருவிக்காரன் சாலை பாலம், குருவிக்காரன் சாலைக்கு இணையாக வைகை ஆற்றின் பகுதியில் போடப்பட்டுள்ள தற்காலிக தார்சாலை, ஒபுளா படித்துறை பாலம், சிம்மக்கல்லையும் செல்லூரையும் இணைக்கும் எம்.ஜி.ஆர்.மேம்பாலம், ஆரப்பாளையம் தத்தனேரியை இணைக்கும் ஜெயலலிதா மேம்பாலம், ராஜா மில் ரோடு செல்லூர் எல்.ஐ.சி. பகுதியை இணைக்கும் கர்டர் பாலம் ஆகியவை மூடப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலம் அதன் அருகே உள்ள யானைகல் புதுப்பாலம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் மேம்பாலம் ஆகியவை வழக்கம்போல போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த பாலங்களில் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    குறிப்பிட்ட நேர இடை வெளிக்கு பின்னர் வேறு எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை. இதனால் மதுரையில் ஊரடங்கு உத்தரவு பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×