search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு பணியில் மருத்துவர்கள்
    X
    கண்காணிப்பு பணியில் மருத்துவர்கள்

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 5 பேர் கண்காணிப்பு

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
    திருப்பூர்:

    கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 120 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லாத, இந்தியாவில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஏற்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்களிடம் இருந்து, எளிதாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புகள் பல மடங்கு அதிகம் என சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தால், அதற்கேற்ப சிகிச்சை அளிக்க திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடம் பார்த்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அவருடன் திருப்பூரை சேர்ந்த ஒருவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். இதனால் அவர் நேற்று தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்ய வந்தார். அவர்கள் 5 பேருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 பேரும் கொரோனா வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    முன்னதாக திருப்பூர் தொழில் அதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    அவரின் கார் டிரைவருக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×