search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் (கோப்புப்படம்)
    X
    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் (கோப்புப்படம்)

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறி விலை 3 மடங்கு உயர்வு - சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் என புகார்

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் அதிகாரிகள் கெடுபிடி காரணமாக சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுத்ததால் காய்கறி விலை 3 மடங்கு உயரும் நிலை உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    உலகையே அச்சுறுத்தி வரும் கெரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6-வது நாளான இன்று மதுரையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் நேர கட்டுப்பாட்டின்படி திறக்கப்பட்டன.

    பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற மார்க்கெட் மற்றும் மீன் இறைச்சி கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கினர். சில இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கினர்.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்த கடைகளில் இன்று காலை மாநகராட்சியால் டோக்கன் வழங்கப்பட்ட வியாபாரிகளுக்கு மட்டும் சில்லரை விற்பனைக்காக காய்கறிகள் வழங்கப்பட்டன.

    சிறு வியாபாரிகள் மற்றும் பலசரக்கு கடைகளில் காய்கறி விற்பவர்கள், தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்பவர்களுக்கு காய்கறி வாங்க அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு சிறு கடைகளில் காய்கறி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அனுமதி அளித்த மதுரை ஆயுதப்படை மைதானம், மதுரை கல்லூரி மைதானம் உள்ளிட்ட 10 இடங்களில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க அதிகளவில் திரண்டனர். அங்கு சமுதாய விலகலை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் இன்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    மலை காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் அதிக அளவில் சென்ரல் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்க அனுமதி மறுக்கப்பட்டதால் காய்கறிகள் அதிகளவில் தேக்கம் அடைந்தன.

    இது மொத்த வியாபாரிகள் மத்தியில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தின. சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள சில்லறைக் கடைகள் மூடப்பட்டதால் உழவர் சந்தை மற்றும் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டுகளில் சற்று கூடுதல் விலையிலேயே காய்கறிகள் விற்கப்பட்டன.

    ஆனால் தெருவோர கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு சில வியாபாரிகள் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள்.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு இன்று கேரட் கிலோ ரூ. 15 விற்கக்கப்பட்டது. ஆனால் சாலையோர வெளிப்புற மார்க்கெட்டுகளில் கேரட் கிலோ ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. அதுபோல அனைத்துக் காய்கறிகளும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

    இதனை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் தீவிரமாக கண்காணித்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சென்ட்ரல் மார்க்கெட்டில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனைக்காக வழங்கப்பட்டன.

    எனவே காய்கறிகள் அனைத்து மக்களுக்கும் சரியான விலையில் கிடைக்கும் வகையில் சிறு வியாபாரிகளுக்கும் வீதி வீதியாக சென்று காய்கறிகளை விற்பனை செய்பவர்களுக்கும் மொத்த விற்பனைக் கடைகளில் காய்கறிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் நியாயமான விலையில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தால் மட்டுமே மக்கள் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும். தாங்கள் வசிக்கும் பகுதியில் விலை அதிகம் காணப்பட்டால் மக்கள் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இது சமூக வில கலை கேள்விக்குறியாக்கி விடும்.

    எனவே அந்தந்த பகுதியிலுள்ள காய்கறி மார்க் கெட்டுகளில் நியாயமான விலையில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    Next Story
    ×