search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் உள்ள வெளிமாநில ஊழியர்களுக்கு உதவ நடவடிக்கை
    X
    தமிழகத்தில் உள்ள வெளிமாநில ஊழியர்களுக்கு உதவ நடவடிக்கை

    தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் தவித்து வரும் வெளிமாநிலத்தவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 25-ந்தேதியில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு வேலை செய்வதற்காக புலம் பெயர்ந்தவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் உள்ளனர்.

    டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் இந்த பட்டியலில் உள்ளனர். உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து நடந்தே சொந்த ஊர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாநில எல்லையில் திடீரென ஆயிரக்கண்கானோர் திரண்டனர். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை இக்கூட்டம் தவிடு பொடியாக்கியது. இதில் யாராவது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பேராபத்து ஏற்படும்.

    இதை உடனடியாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலமும் வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை அங்கேயே கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் கெட்டுக்கொண்டது.

    இந்நிலையில் ‘‘தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என முதலமைச்சர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.

    அத்துடன் ‘‘வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்க வேண்டும்.

    ஊழியர் சம்பள பட்டியல் தயாரிக்க கல்வி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 3 நாள் சிறப்பு அனுமதி, மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறலாம்’’ என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×