search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவால் கோவையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கிராஸ்கட் சாலை வெறிச்சோடியிருப்பதை படத்தில் காணலாம்
    X
    ஊரடங்கு உத்தரவால் கோவையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கிராஸ்கட் சாலை வெறிச்சோடியிருப்பதை படத்தில் காணலாம்

    ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி கோவை வெறிச்சோடியது

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதையடுத்து கோவையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது.

    தடை உத்தரவையடுத்து கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

    முக்கிய வீதிகளான ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, திருச்சி ரோடு, நஞ்சப்பாரோடு, கிராஸ்கட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, 100 அடி ரோடு ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.

    இதனையடுத்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை மாநகர பகுதியில் உள்ள பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் போலீசார் இரவு முழுவதும் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் இரு சக்கர வானம் மற்றும் நடந்து சென்றவர்களை விரைவாக வீட்டுக்கு செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர்.

    மாலை முதல் மாவட்டம் முழுவதும் வாடகைக்கார்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. சொந்த காரில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் சென்றவர்களிடம் முக்கிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். மாநகரில் 1,500 மாவட்டத்தில் 1,500 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இன்று முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தது. தடை உத்தரவை மீறி சாலைகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்றவர்களை வெளியே வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கோவை மக்கள் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ளும் ரேஸ்கோர்ஸ் பகுதியும் தடை உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் அனைத்தும் பஸ்கள், பயணிகள் இன்றி வெறிச்சோடியது. முக்கிய சாலைகளான அவினாசி சாலை, பழைய பஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இன்று காலை வாகனங்கள் ஏதும் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

    அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் ஒரு சில மளிகை கடைகள் திறந்து இருந்தன. அங்கு வந்து மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் காலையில் சிறிது நேரம் மார்க்கெட்டும் செயல்பட்டது. வியாபாரிகள் மட்டுமே வந்தனர். பொதுமக்கள் யாரும் வரவில்லை. திருப்பூர் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை, எட்வின் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று மாலை முதல் அந்த சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகனங்கள் இன்றியும் வெறிச்சோடியது. இதேபோல் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர், மஞ்சூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருகின்றனர்.
    Next Story
    ×