search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

    தேனி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக சாரல் மழை பெய்யத்தொடங்கி உள்ளதால் கோடை மழை பலன் தருமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தேனி மாவட்டத்திலும் அதிகாலை தொடங்கி மாலை 6 மணிக்கு பிறகும் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது.

    இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வருவதையே குறைத்து வந்தனர். நேற்று மாலை முதல் வெயிலின்தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கூடலூர், லோயர்கேம்ப், குமுளி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இரவு வரை விட்டு விட்டு பெய்த இந்த மழை இன்று அதிகாலையிலும் தொடர்ந்தது.

    இதேபோல மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் கோடை மழை அணைகளுக்கு நீர்வரத்தை அதிகப்படுத்தி விவசாயத்திற்கு உதவுமா? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்த நிலையில் நேற்று ½ மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    பிளம்ஸ், பேரிக்காய் சீசன் தொடங்க 2 மாதமே உள்ளது. தற்போது பிளம்ஸ், பேரிக்காய் மரங்களில் பூக்கள் பூத்துள்ளது. இந்த சூழ்நிலையில் சாரல் மழை பெய்து வருவதால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் நம்பி உள்ளனர்.

    பெரியாறு அணை நீர்மட்டம் 114.90 அடி. நேற்று 3 கன அடி மட்டுமே தண்ணீர் வரத்து வந்த நிலையில் இன்று காலை 100 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1710 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.20 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.45 அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 85.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.2, தேக்கடி 0.2, வைகை அணை 0.2, மஞ்சளாறு 20, சோத்துப்பாறை 24 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×