search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிய கோவை ஊட்டி பஸ்நிலையம்.
    X
    பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிய கோவை ஊட்டி பஸ்நிலையம்.

    கோவையில் 50 சதவீத பஸ்கள் இயக்கம்

    கோவை பகுதியில் 662 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. புறநகர் பஸ்கள் திருச்சி, சேலம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து குறைவான அளவே இயக்கப்படுகிறது.
    கோவை:

    கொரோனா பீதி காரணமாக பஸ், ரெயில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கையொட்டி இந்தியா முழுவதும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை மாவட்டத்தில் நகர, புறநகர் பஸ்கள் என மொத்தம் 1018 பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பீதி காரணமாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கோவையில் உள்ள பஸ் நிலையங்களான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் ஆகியவை மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவை நகர் பகுதியில் 662 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. புறநகர் பஸ்கள் திருச்சி, சேலம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து குறைவான அளவே இயக்கப்படுகிறது.

    குளிர்சாதன வசதி கொண்டு அனைத்து பஸ்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடுக்கு கோவையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஈரோட்டில் இருந்து கோவைக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்கள் மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    தமிழக- கேரள எல்லைகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழக- கேரள எல்லையான வாளையாறு வரை 3 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

    கொரோனா பீதி காரணமாக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக பஸ்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம். புறநகர் பகுதிகளுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்து வெளியே செல்லும் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கிறோம். இதே போல டிரைவர்- கண்டக்டர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். மேலும் முக கவசம் அணிந்தபடி வாகனத்தை இயக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×