search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    நரிக்குடி அருகே வாக்கிடாக்கி மாயமானதால் வாலிபரை  தாக்கிய போலீசார்- உறவினர்கள் முற்றுகை

    போலீஸ் நிலையத்தில் இருந்து வாக்கி டாக்கி மாயமானதால் வாலிபரை போலீசார் தாக்கினர். இதனை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி எஸ்.மரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவக்கண்ணன் (வயது 21). இவர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக சம்பவத்தன்று ஏ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் மாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை அழைத்துள்ளனர். இதனால் தவக்கண்ணன் போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் போலீஸ் நிலைய வாக்கிடாக்கி மாயமானது குறித்து கேட்டுள்ளனர்.

    போலீஸ் நிலையம் சென்ற தவக்கண்ணன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர். ஏ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்று கேட்டனர்.

    அப்போது காலையில் தவக்கண்ணன் வந்து சென்ற பிறகு போலீஸ் நிலையத்தில் இருந்த வாக்கிடாக்கி மாயமாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதுபற்றி விசாரிக்கவே மாலையில் தவக்கண்ணனை அழைத்ததாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தவக் கண்ணனை உறவினர்கள் சந்தித்தபோது அவர் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாக்கி டாக்கி மாயமானது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கேட்டதோடு தாக்கியதாக தவக்கண்ணன் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தவக்கண்ணன் விடுவிக்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர்.

    விசாரணைக்கு அழைத்து தவக்கண்ணனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    சம்பவ இடத்திற்கு துணை சூப்பிரண்டுகள் சசிதர் (திருச்சுழி), வெங்கடேசன் (அருப்புக்கோட்டை) விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமரசம் செய்தனர். இதற்கிடையில் தவக்கண்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×