search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பட்டி பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி
    X
    செம்பட்டி பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மக்கள் சுய ஊரடங்கு 99 சதவீதம் வெற்றி

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட சுயஊரடங்கு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 99 சதவீதம் வெற்றி அடைந்தது.
    திண்டுக்கல்:

    கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை.

    ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ரெயில் நிலைய வளாகத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திருமண நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், சுய ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதிகாலையிலேயே திட்டமிட்டபடி திருமண நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இந்த நிகழ்ச்சிகளில் குறைவான உறவினர்களே பங்கேற்றனர்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு பல இடங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் சேவையை பாராட்டி பொதுமக்கள் கை தட்டி வரவேற்றனர்.

    இதேபோல் தேனி மாவட்டத்திலும் 99 சதவீதம் மக்கள் சுய ஊரடங்கு வெற்றியடைந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எதுவும் இயக்கப்படவில்லை. கடைகள், உணவகம், உழவர் சந்தை உள்ளிட்ட எந்தவித வியாபார நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு உத்தரவின்படி, தற்போது தேனி மாவட்டத்திலிருந்து தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வரை அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று தேனி அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். இதேபோல், இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழகப் பகுதிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×