search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்
    X
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

    பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முடிவு

    தினத்தந்தி நாளிதழ் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ”பத்மஸ்ரீ” பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
    சென்னை:
     
    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை ஆகிய 5 துறைகளிலும் தினத்தந்தி நாளிதழ் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனார் செய்துள்ள சாதனைகள் காலத்தால் மறக்க இயலாதவை.

    சாதி, மதம் கடந்து தன்னலமற்ற வகையில் இந்த 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சேவைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர செய்தன.

    கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் துறைகளில் அவர் செய்த மகத்தான சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கின. மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி பெருமைப்படுத்தியது.

    காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான ஆன்மிக பெரியவர்களும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்ந்து உள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மணிமண்டப கட்டுமான பணிகளை தொடங்கின. 60 சென்ட் நிலப்பரப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் நடுவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மணி மண்டபம் திறப்பு விழா

    மணிமண்டபத்தின் மற்றொரு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக அலுவலகத்துடன் கூடிய நூலகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில்  22-2- 2020 அன்று திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினத்தில் திறப்பு விழாகோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில், ”பத்மஸ்ரீ” பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

    இதற்கான அறிவிப்பை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழக சட்டசபையில் இன்று வெளியிட்டார்.
    Next Story
    ×