search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பாதிப்பு- கோவை மாணவியுடன் தொடர்பில் இருந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

    கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கோவை மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த அவரது சகோதரி, கார் டிரைவர், மாணவியின் தந்தை, உறவினர்கள் உள்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் ஸ்பெயின் நாட்டில் தங்கி எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊருக்கு வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 13-ந் தேதி இவர் விமானம் மூலம் டெல்லிக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து 15-ந் தேதி பெங்களூருக்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து ரெயில் மூலமாக 17-ந் தேதி கோவைக்கு வந்தார்.

    வீட்டிற்கு வந்த மறு நாளில் இருந்து அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் கடந்த 19-ந் தேதி சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் அவர் வந்த போக்குவரத்து வசதி குறித்து விசாரித்து விட்டு அவரை சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதித்தனர்.

    பின்னர் அவரது சளி, ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பினர். நேற்று பரிசோதனை முடிவு வந்தது. இதில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உறுதி செய்தார்.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியை டாக்டர்கள் பிரத்யேக வார்டில் அனுமதித்து அங்கு அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவி சிகிச்சை பெற்று வந்த வார்டில் திருப்பூரை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவரும் கொரோனா அறிகுறி இருப்பதாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிவு வரவில்லை. இதையடுத்து அவரை அந்த வார்டில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றி கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் டீன் அசோகன் கூறுகையில், ஸ்பெயினில் இருந்து கோவைக்கு வந்த மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

    மேலும் அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த அவரது சகோதரி, கார் டிரைவர், மாணவியின் தந்தை உறவினர்கள் உள்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் மாணவியின் தந்தை, சகோதரி, டிரைவர் உள்பட 5 பேரின் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்.

    இது தவிர டெல்லி, பெங்களூருக்கு விமானத்தில் வந்து கடந்த 17-ந் தேதி பெங்களூரில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்துள்ளார். இதனால் அவருடன் ரெயில், விமானத்தில் வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் மாணவியுடன் ரெயில், விமானத்தில் பயணித்தவர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களையும் வருமாறு அழைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கோவை, திருப்பூர், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் கொரோனா அறிகுறிகளுடன் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று மக்கள் ஊரடங்கை முன்னிட்டு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் முன்னதாக கிளம்பிய விரைவு ரெயில்கள் தொடர்ந்து இயக்க அறிவுறுத்தப்பட்டன.

    அதன்படி பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நேற்று முன்தினம் விரைவு ரெயில் திருப்பூருக்கு கிளம்பியது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

    அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினர் ரெயிலில் வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது குறிப்பிட்ட 7 பேருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ குழுவினர் அவர்கள் 7 பேரையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×