search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாளையார் அருகே மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்- உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

    வாளையார் அருகே மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    கோவை:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழக-கேரளம் எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் மூடப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு நடைபெற்றது.

    இதனால் கேரளாவில் இருந்து வாளையாறு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வாளையாறு சோதனை சாவடி அருகே நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து துர்நாற்றத்துடன் சிவப்பு நிற திரவம் கொட்டியதால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரி அருகே சென்று பார்த்தனர்.

    ஓட்டுநர் இல்லாமல் ரத்தம் போன்ற திரவம் கொட்டியதால் உடனடியாக க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த க.க.சாவடி போலீசார் நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியை எடுத்து அருகில் உள்ள மாவூத்தம்பதி வனப்பகுதியை ஒட்டி நிறுத்தினர். பின்னர் லாரியில் இருந்த டிரைவரின் செல்போன் எண்ணுக்கு அழைத்து அவரை வரசொல்லி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகளை நாமக்கல் மாவட்டத்திற்கு எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. அப்போது அங்கு காரில் வந்த லாரி உரிமையாளரான நெல்லையை சேர்ந்த எபினேசர் (44), மற்றும் அவரது நண்பர்கள் ராஜன் (38), நாமக்கல்லை சேர்ந்த தனுஷ் பிரபு (33), ஆகியோர் லாரியை விடுவிக்க கோரி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் லட்சுமணபெருமாள் (35), உட்பட 4 பேரையும் க.க.சாவடி போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×