search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

    கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படவேண்டாம்- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

    பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவைப்படும் முகமூடி, கிருமி நாசினிகள் பற்றாக்குறையின்றி கிடைக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் முக கவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிக்கும் பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பூபால்ராயல்புரத்தில் மகளிர் உதவிக்குழுக்கள் மூலம் முக கவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிக்கும் பணிகளையும், தாளமுத்துநகரில் முக கவசம் தயாரிக்கும் பணிகளையும், மாப்பிள்ளையூரணி அருகில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதியில் கிருமி நாசினி மற்றும் நாப்கின் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கைகழுவது குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக கை கழுவுமிடம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கூடுதலாக தேவைப்படும் முகமூடி, கிருமி நாசினிகள் பற்றாக்குறையை போக்கும்வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இவைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மகளிர் உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முக கவசம் மற்றும் கிருமி நாசினி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு தெரிவித்துள்ளவாறு அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி மருத்துவர்களின் ஆலோசனை படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, உதவி திட்ட அலுவலர் பிரேமா மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×