search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கூடங்குளத்தில் போலி டாக்டர் கைது

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக வைத்தியம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கூடங்குளம்:

    கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாமூடு செம்மண் விளையைச் சேர்ந்தவர் ஞானதாஸ் ( வயது 59). இவர் சித்த மருத்துவம் படித்து உள்ளார். பின்னர் இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் எதிரே மெடிக்கல் நடத்தி வருகிறார். மேலும் இவர் தனது மெடிக்கலின் பின்புறம் உள்ள அறையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் இவர் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இவரிடம் மருத்துவம் பார்த்தவர்கள் பலர் பாதிப்புக்குள்ளானதாக இவர் மீது பல்வேறு புகார்கள் கலெக்டருக்கு வந்தது. இதையடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முறைகேடாக அனுமதி இல்லாமல் மருத்துவமனை நடத்துவதும், இவர் சித்த மருத்துவம் படித்து ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகத்தை தொடங்கி விற்பனை செய்து வந்ததோடு மருந்தகம் அருகில் பல அறைகள் கட்டி மருத்துவம் பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருத்துவமனைக்கு மாவட்ட மருத்துவ அதிகாரி ஆல்வின் ஜோஸ் சீல் வைத்தார். மேலும் அலோபதி படித்த இவர் எதன் அடிப்படையில் ஆங்கில மருந்துகளை விற்பனை செய்கிறார் என ராதாபுரம் தாசில்தார் செல்வன், வட்டார மருத்துவ அதிகாரி கண்ணன் கூடன்குளம்இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் வருவாய் துறை, சுகாதார துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 20 ஆண்டுகளாக கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சான்றிதழ் இவர் வழங்கியதாகவும் அதை அணு மின் நிலைய நிர்வாகம் எதன் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது எனவும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மருத்துவம் படிக்காமல் போலியாக வைத்தியம் பார்த்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா வழக்குப்பதிவு செய்து ஞானதாசை கைது செய்தார். பின்னர் அவரை வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×