search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்- ஆண்டிப்பட்டி விசைத்தறி கூடங்களில் ரூ.40 லட்சம் ஜவுளிகள் தேக்கம்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆண்டிப்பட்டி விசைத்தறி கூடத்தில் ரூ.40 லட்சம் ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    காட்டனால் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக ஈரோடு வார சந்தைக்கே அதிக அளவில் கொண்டு செல்லப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு வாரச்சந்தை வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்த ஜவுளிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர். நேற்று வரை ரூ.40 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

    விசைத்தறி கூடங்களில் இருந்து தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால் காட்டன் ரக வேட்டி, சேலைகளுக்கு அதிக அளவில் மவுசு உண்டு.

    இதுபோன்ற சமயங்களில் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஈரோட்டில் இருந்து காட்டன் துணிகள் அனுப்பி வைக்கப்பட்டு அவை சலவை செய்து மீண்டும் அந்த ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தொழிலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் தற்போது வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜவுளிகள் தேக்கம் அடைந்தபோதிலும் விசைத்தறி கூடங்களை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இயக்கி வருகின்றனர். ஆலைகளை மூடி விட்டால் தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க சிரமம் ஏற்படும் என்பதை கருதி ஆலையை இயக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசு ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் தள்ளுபடி சலுகை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×