search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    யார்? யார்? பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

    கொரோனா வைரஸ் நோய் சம்பந்தமாக யார்? யார்? பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
    சென்னை :

    சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, ‘கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவமனையும் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என்று துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக சட்டசபையில் பேசியிருக்கிறார். பொதுவாக ஒரு பரிசோதனை மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும். ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது. தமிழகத்தில் 5 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அப்பல்லோ, வேலூர் சி.எம்.சி. போன்ற சிறப்பான வசதி கொண்ட தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர். அனுமதி பெற்று அனுமதிக்கப்படும்.

    தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க உள்ளது. அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நான் திடீர் ஆய்வு மேற்கொண்ட நேரத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்.

    அவரிடம், நீங்கள் நோய் பாதித்த நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ சென்று வந்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அவர் இல்லை என்று சொன்னார். தங்கள் அலுவலகத்தில் இதுபோன்ற சான்றிதழ் வாங்கி வர சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். அவரிடம் இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் இருக்கிறதா? என்று டாக்டர்கள் கேட்டனர்.

    கொரோனா வைரஸ்

    அவர் இல்லை என்று கூறினார். இந்த 3 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதும், அவர் அங்கிருந்து சென்றார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள்தான் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கொரோனா வைரசுக்கு நேரடி மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சப்போட்டிங் மருந்துகள் உள்ளன. இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவற்றுக்கு உள்ள மருந்துகளை கூட்டு மருந்தாக அளித்து அதனை குணப்படுத்தி உள்ளோம். கூட்டு மருந்து குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மற்ற மாநிலங்களில் நடைபெறும் ஆய்வு குறித்தும் அறிந்து வருகிறோம். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×