
தூத்துக்குடி:
கொரோனா எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. துறை முகத்திற்கு சரக்குகளை இறக்குவதற்காகவும், ஏற்றி செல்வதற்காகவும் வழக்கமாக வரக்கூடிய லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உப்பில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 80 சதவீதம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
இங்கு தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார் உள்பட 22 ஊர்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் 400 சிறிய உற்பத்தியாளர்களும், ஏறத்தாழ 100 பெரிய உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் உப்பு தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உப்பு விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட உப்பளங்களில் வழக்கமான உப்பு உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனா எச்சரிக்கை காரணமாக கடந்த 5 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான உப்பு வர்த்தகம் பாதித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயபாலன் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு உப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா எச்சரிக்கை காரணமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு மூட்டைகள் அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த 5 நாட்களில் உப்பு வர்த்தகம் சுமார் ரூ. 1 கோடி வரை பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உப்பு உற்பத்தி குறித்து தூத்துக்குடியை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர் பேச்சிமுத்து கூறும்போது, ‘கொரோனா எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம் போல் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உப்பு எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்பதால் அதன் தேவை அதிகமாகவே உள்ளது’ என்றார்.