search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
    X
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தை ஒத்திவைத்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் (வயது 98) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ந் தேதி காலமானார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 43 ஆண்டுகள் தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    பேராசிரியர் க.அன்பழகன் தி.மு.க.வின் 5-வது பொதுச் செயலாளராக 1977-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்ததாக தி.மு.க.வின் 6-வது பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பொதுக் குழு வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந் தேதி அறிவித்தார்.

    இந்த நிலையில், தி.மு.க.வின் 6-வது பொதுச்செயலாளர் யார்? என்று யூகங்கள் நிலவி வந்த நிலையில், தி.மு.க. பொருளாளராக இருந்து வந்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இருப்பதால் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், எனவே 29-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (16-ந் தேதி) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நடைபெற இருந்த தி.மு.க. நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக மு.க.ஸ்டாலின் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    பின்னர் மீண்டும் அன்றைய தினம் (16-ந் தேதி) நள்ளிரவிலேயே மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில், 29-ந் தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அந்த அறிக்கையில் “29-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதோடு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31-ந் தேதி வரை ஒத்திவைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×