search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு தனிப்பிரிவு

    திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், அண்டை மாநிலங்களிலிருந்து இந்நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டம் கூடும் இடங்களுக்கு பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சிறு இடைவேளைகளில் குழந்தைகள் தங்கள் கை, கால்கள் மற்றும் முகங்களை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிட பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கைகளை கழுவி சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கொரோனா தடுப்பது குறித்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களின் உட்புறங்களிலும் டயர்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும், மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் பூங்கோதை மற்றும் நலப்பணிகள் துணை இயக்குனர் நளினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவர் சந்தனகுமார் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அவைத் தலைவர் நாட்டாமை காஜாமைதீன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×