search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பக்கரை அருவி
    X
    கும்பக்கரை அருவி

    தேனியில் சுற்றுலா தலங்கள் மூடல்

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பீதியால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.
    தேனி:

    சீனாவில் ஏராளமானோரை பலி கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

    இதனால் பல நாடுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அங்கிருந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக-கேரள எல்லைகளான குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய இடங்களில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

    கூடலூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் ரத்த மாதிரி சோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தாக்கம் இல்லை என தேனி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களான வைகை அணை, கும்பக்கரை அருவி, மேகமலை, சின்ன சுருளி, சுருளி அருவி ஆகியவை நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

    இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×