search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    கோட்டையில் மீண்டும் அதிமுக கொடி பறக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

    2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் மீண்டும் அ.தி.மு.க. கொடி பறக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அமைச்சர் ஜெயக்குமார் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்திரத்தினால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு 18 சதவீதம், கையினால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு 5 சதவீதமாக இருந்த வரி தற்போது இரண்டுக்கும் ஒரே விகிதமாக 12 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு இருப்பது விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களில் தீப்பெட்டி தயாரிப்பவர்களுக்கு நல்ல விசயமாக இருக்கும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய அரசு கவனத்தில் கொண்டு கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இருக்கும்போது விலையை உயர்த்துவதும், குறையும் போது குறைப்பதும் மக்களுக்கு நல்லது. பெட்ரோல் விலை மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வை மனதில் நினைத்து பேசி இருக்கலாம். தமிழகத்தில் யார் குபேர அதிபதி? என்று மக்களுக்கு தெரியும். ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் தி.மு.க.தான் என்பது உலகம் அறிந்த விஷயம். எனவே அவர் தி.மு.க. பற்றிதான் பேசி உள்ளார். அ.தி.மு.க.வை நினைத்து பேசி இருக்க மாட்டார்.

    மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் மீண்டும் அ.தி.மு.க. கொடி பறக்கும்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் இருந்து பன்னாட்டு முனையத்துக்குதான் வந்தேன். அப்போது சட்டத்துக்கு உட்பட்டு சுயவிவரம் எழுதி தந்தேன். என்னையும் கொரேனா வைரஸ் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    நான் எப்போதும் சூடாவதில்லை. ‘கூலாக’ இருப்பதால் ‘நார்மலாக’ இருந்தது. மருத்துவ பொருட்கள் தட்டுப்பாட்டு இல்லாமல் தராளமாக கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×