search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட சுப்புலட்சுமி.
    X
    கொலை செய்யப்பட்ட சுப்புலட்சுமி.

    போடியில் முதல் மனைவியை படுகொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய ராணுவ வீரர்

    தேனி மாவட்டம் போடியில் தனது மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய ராணுவவீரர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி சந்தனமாரியம்மன் கோயில் ஜெயம்நகர் பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன். ராணுவ வீரர். இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சியாமளா (வயது6) என்ற பெண் குழந்தையும், ராஜேஸ்(3) என்ற ஆண்குழந்தையும் உள்ளனர்.

    முனீஸ்வரன் ராணுவத்தில் வேலை செய்வதால் அவரது குடும்பத்தினரை தனது பெற்றொர் வீட்டில் தங்க வைத்தார். விடுமுறையில் ஊருக்கு வரும்போது மனைவி குழந்தைகளை சந்தித்து பேசி வந்தார்.

    சமீபத்தில் முனீஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுப்புலட்சுமி இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். தனது மனைவி குடும்ப பிரச்சனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவவீரர் முனீஸ்வரன் கூறி கதறி அழுதார்.

    இதுபற்றி போடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுப்புலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் கூறினர். இதையடுத்து சுப்புலட்சுமி சாவு குறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.

    இதை தொடர்ந்து முனீஸ்வரன் குடும்பத்தினரை சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்த நிலையில் சுப்புலட்சுமி உடல் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சுப்புலட்சுமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். முனீஸ்வரனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்தது. நாளடைவில் அந்த பெண்ணை முனீஸ்வரன் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண் கர்ப்பமானார். இதை தொடர்ந்து அவருக்கு வளைகாப்பு நடத்த முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

    இந்த விவரம் அறிந்த சுப்புலட்சுமி கணவனை கண்டித்தார். மேலும் வளைகாப்பு நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உண்டானது. இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் சுப்புலட்சுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    பின்பு கொலையை மறைக்க சுப்புலட்சுமி உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி முனீஸ்வரனின் தந்தை ராஜூ( 65), தாய் மாரியம்மாள்(55), சகோதரர்கள் சதீஷ்குமார், ராஜசேகரன், உறவினர் வக்கீல் பாலமுனீஸ், அன்னலட்சுமி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவவீரர் முனீஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சுப்புலட்சுமியை முனீஸ்வரன் குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்துள்ளனர். முனீஸ்வரன் தொடர்ந்து குடும்பசெலவுக்கு பணம் அனுப்பாததால் சுப்புலட்சுமி 2 குழந்தைகளை காப்பாற்ற நூறுநாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்று வந்ததாகவும் இரண்டாவது திருமணம் செய்தபின் தொடந்து தன்னை துன்புறுத்தி வருவதாக அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

    தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் தனது தாய்வீட்டிற்கு அனுப்ப இவர்கள் மறுத்ததால் தனது குழந்தைகளுடன் இருக்கவேண்டும் என நினைத்து அந்த வீட்டில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த கொலை சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×