search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பைகள்
    X
    பிளாஸ்டிக் பைகள்

    பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அலுவலர்கள் முன்வர வேண்டும்- கலெக்டர்

    பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அலுவலர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் சாந்தா அறிவுறுத்தி உள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசியதாவது:-

    நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்பூமியை காக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் நடத்தப்படும் மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு கையாண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அழிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பதிலாக மாற்றுப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவற்றை முறையாக தெரிந்துகொண்டு, அவ்வழிமுறைகளை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் முன்வர வேண்டும்.

    மேலும் பொது மக்கள், மின் கழிவுகளை தனியாக பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் நகராட்சி மின் கழிவு சேகரிக்கும் அறைகளை நிறுவியுள்ளது போல், ஊராட்சி அமைப்புகளும், தங்கள் பகுதிகளில் உற்பத்தியாகும் மின் கழிவுகளை தனியாக பிரித்து சேகரிக்கும் அமைப்புகளை நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மின்னணுக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்தும், அவற்றை நடைமுறை படுத்துவதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளர்கள் விளக்கி கூறினர். இது கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதில் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், சுற்றுச்சூழல் பொறியாளர் நளினி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×