search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு ஆலை
    X
    பட்டாசு ஆலை

    சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

    சிவகாசி, மேட்ட மலை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது.

    பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்ததோடு, பேரியம் உப்பு, சல்பர் போன்ற வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுகளில் திருத்தம் செய்யகேட்டு தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட ரசாயன பொருட்களை கொண்டு சிவகாசியில் தற்போதும் சில ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை பட்டாசு ஆலை தயாரிப்பாளர்கள் மறுத்ததோடு போலி பட்டாசுகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என சென்னை மண்டல சி.பி.ஐ. இயக்குநர் விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் இன்று சி.பி.ஐ. சூப்பிரண்டு சுப்பையன் தலைமையில் 14 பேர் சிவகாசி வந்தனர். அவர்கள் சிவகாசி, மேட்ட மலை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தினர்.

    Next Story
    ×