search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் எரித்துக் கொலை?

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடியைச் சேர்ந்தவர் குமார் (வயது 45). மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினாக இருந்த இவர், உள்ளாட்சி தேர்தலில் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஏந்தல் பகுதியில் உள்ள ஊரணியில் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மாயமான குமாரின் மோட்டார் சைக்கிள் ஊரணியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய சோதனையில் அதே பகுதியில் உடல் புதைக்கப்பட்ட அடையாளமும் காணப்பட்டது.

    இதையடுத்து தடயவியல் துறையினர், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தை தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கருகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. இறந்தவர் யார்? என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. குமாரின் மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் கிடந்ததால் அவரை கொன்று புதைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த குமாரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று காலையில் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×