search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோவில்
    X
    தஞ்சை பெரிய கோவில்

    தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்

    சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வெளியூர் பயணிகளிடம் பலர் பணம் பறித்து ஏமாற்றும் சூழல் தஞ்சை பெரிய கோவிலில் அதிகரித்துள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

    குடமுழுக்கையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாதபடி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் குடமுழுக்கன்று எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. வெளியூர்வாசிகள் பெரும்பாலானோர் குடமுழுக்கிற்கு வருகை தரவில்லை.

    மேலும் கோவிலுக்குள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த அளவிலான பொதுமக்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கானவர்கள் பெரியகோவில் கோபுரம் தெரியும் இடங்களில் நின்று குடமுழுக்கை கண்டு ரசித்தனர்.

    குடமுழுக்குவிழா நிறைவடைந்த மறுநாளில் இருந்து பெரியகோவிலுக்கு வரும் வெளியூர் வாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. மண்டலாபிஷேகம் முடியும் வரை கூட்டம் அதிகமாக இருக்கும் பின்னர் கூட்டம் படிப்படியாக குறையும் என எதிர்பார்த்த நிலையில் மண்டலாபிஷேம் முடிந்தும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியகோவிலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த குறைந்த அளவிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

    மேலும் ஓய்வின்றி அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது காட்டுவதால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களை அங்குள்ள அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சில நபர்கள் அதிக பணத்தை பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சுற்றுலா பயணிகளை கோவில் கருவறைக்கு அழைத்து செல்வதால் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் குறுக்கு வழியில் செல்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

    வெளியூர் பயணிகளை பலர் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் பறித்து ஏமாற்றும் சூழல் பெரிய கோவிலில் அதிகரித்துள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் அதனை அறிந்து இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகள் பக்தர்களை தைரியமாக ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே பெரிய கோவிலுக்கென்று தனி காவல் கட்டுப்பாட்டு மையத்தை கோவில் அருகில் நிரந்தரமாக அமைத்துக்கொடுத்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசாரை பணியமர்த்தி பக்தர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குடமுழுக்கை தொடர்ந்து பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் பெரியகோவில் வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தி மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×