search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் பேட்டி அளித்த காட்சி.
    X
    முக ஸ்டாலின் பேட்டி அளித்த காட்சி.

    என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

    தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.)எதிராக தீர்மானம் நிறை வேற்றாததை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சென்னை:

    தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.)எதிராக தீர்மானம் நிறை வேற்றாததை கண்டித்தும், அமைச்சர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    அதை தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இதே சபையில் ஏற்கனவே வலியுறுத்தினோம். இன்றும் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்கவில்லை.

    மக்கள் தொகை கணக் கெடுப்பு படிவத்தில் தேவையில்லாத கேள்விகள் உள்ளன. இதனால் என்ன பாதிப்பு என்பதை நான் சபையில் விவரமாக எடுத்து கூறினேன்.

    13 மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் கூட்டணியில் இருந்த மாநிலங்களிலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    புதுச்சேரி, மேற்கு வங்காளத்திலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். கேரளாவில் தீர்மானம் போட்டது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தையும் நாடி இருக்கிறார்கள்.

    மத்திய அரசுக்கு மாநில அரசு எழுதிய கடிதத்துக்கு எந்த பதில் கிடைத்தது என்று கேட்டால் பதில் சொல்ல வில்லை. கடிதத்தையும் வெளியிடவில்லை.

    தீர்மானத்தை நிறைவேற்ற ஏன் பயப்படுகிறார்கள் என்றால், தீர்மானம் போட்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும். ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை வரும் என பயப்படுகிறார்கள்.

    எனவேதான் தீர்மானத்தை நிறைவேற்ற மறுக்கிறார்கள். அமைச்சர் திரும்ப திரும்ப தவறான தகவலையே தெரிவிக்கிறார்.

    பலமுறை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம். மீண்டும் சபை நடவடிக்கையில் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×