search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    அவினாசியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி

    கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றும் வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவினாசி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 7400 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    அவினாசில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் நீர் நிரப்பி பின்னர் வீட்டு குழாய்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் வினியோகித்து வருகின்றனர். இந்த நிலையில் 15 நாட்கள், 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அவினாசி நகர, மக்கள் கூறுகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் 10 நாட்களுக்கு ஒருமுறை இதையடுத்து தற்போது 15, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

    இந்த தண்ணீர் ஒரு குடும்பத்தினருக்கு 5 அல்லது 7 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அதன்பிறகு தண்ணீருக்காக அலைய வேண்டியுள்ளது. இதனால் அன்றாடப்பணிகள் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும், முற்றுகை போராட்டம் நடத்தியும் எந்த பலனுமில்லை. தற்போது கோடைகாலமாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    குடிநீர் பிரச்சினை குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அவினாசிக்கு 2-ம் குடிநீர் திட்டத்தில் தினசரி 14 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3-ம் குடிநீர் திட்டத்தில் 11 லட்சம் லிட்டர் என மொத்தம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும். ஆனால் 15 அல்லது 16 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு, மின்தடை, பராமரிப்பு என மாதத்தில் 6 முதல் 8 நாட்கள் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அத்துடன் அவினாசி பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோன்று தாராபுரம் பஸ் நிலையத்தில் தினசரி 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. பயணிகள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×