search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    இந்த புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி, இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரை கைது செய்துள்ளது.

    மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில், குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்தும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அழியும் மையை பயன்படுத்தியதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தரப்பு வக்கீல் கூறியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

    அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளின் ஆசியுடன் நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டுமென்றால், இந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இரண்டு வாரங்களில் தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ., டி.என்.பி.எஸ்.சி. பதில் அளிக்க உத்தரவிட்டது.

    Next Story
    ×