search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.
    சென்னை :

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அன்று 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் குறித்து ஆய்வு நடத்த, சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் கடந்த 2-ந் தேதி நடந்தது.

    அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை மார்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை 23 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் அரசு சார்பில், பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்துவது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம். பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

    கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மறைந்த அமைச்சர் க.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் காத்தவராயன், கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும், முன்னாள் எம்.எல்.ஏ. ப.சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நாளை (செவ்வாய்கிழமை) சட்டசபை கூட்டம் இல்லை.

    தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள், ராஜீவ் கொலையாளிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×