search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மீண்டும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வா? கல்வித்துறை சுற்றறிக்கையால் பரபரப்பு

    8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. அது தனித்தேர்வர்களுக்காக அனுப்பப்பட்டது என கல்வி தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறை 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டிலேயே அது நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை கவனமுடன் பரிசீலித்த அரசு, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையிலேயே தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதனை பலரும் வரவேற்றனர்.

    இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கை தற்போது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களை நியமனம் செய்து பட்டியலை 13-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், துறை அலுவலர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பெற்று அனுப்ப வேண்டும். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்து, தேர்வை சுமுகமாக நடத்த உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கையை 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளாகவே கல்வியாளர்களும், பெற்றோரும் பார்க்கின்றனர். 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்த பிறகு, சுற்றறிக்கையில் பொதுத்தேர்வு என்று குறிப்பிட வேண்டிய அவசியம் எதற்கு? என்று கல்வியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘எந்த வகுப்பிலும் படிக்காமல் நேரடியாக 8-ம் வகுப்பு தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே ஏப்ரல் 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். பிற மாணவர்களுக்கு மூன்றாம் பருவதேர்வு மட்டுமே நடக்க உள்ளது. தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடையதேவையில்லை’ என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் கூறுகையில், ‘பள்ளிக்கல்வி துறையின் இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவித்த நிலையில், இந்த அறிக்கையில் பொதுத்தேர்வு என குறிப்பிட்டு ஏன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்?. அரசு தேர்வுத்துறை தனித்தேர்வர்களுக்கான சுற்றறிக்கை என்று கூறுகிறது. அதை ஏற்க முடியாது. இதை தவிர்த்திருக்க வேண்டும்’ என்றார். 
    Next Story
    ×