search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நடந்த காட்சி.
    X
    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நடந்த காட்சி.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உண்மை அல்ல - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு

    சென்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்பது உண்மை அல்ல’, என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
    சென்னை:

    ‘அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா?’, என்ற ரசிகர்களின் கால் நூற்றாண்டு கால எதிர்பார்ப்புக்கு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்ற வார்த்தை மூலம் ரஜினிகாந்த் விடை தந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலே பிரதான இலக்கு என்றும் கூறினார். ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமானது. 2018-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    அரசியல் கட்சிக்கு உண்டான அத்தனை அடித்தள விஷயங்களையும் தனது மன்றத்தில் ரஜினிகாந்த் புகுத்தினார். மன்ற நிர்வாகிகளுக்கு நிறைய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5-ந்தேதி (நேற்று) நடை பெறும் என்று அறிவித்தார். இதனால் நிறைய எதிர்பார்ப்புகளும் நிலவியது.

    அதன்படி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வந்தனர். மாவட்ட செயலாளர்கள் தவிர யாரும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மண்டபத்துக்கு முன்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை 10.25 மணிக்கு ரஜினிகாந்த் கார் மண்டபம் அருகே வந்தது. அப்போது திரண்டிருந்த மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் உருவப்படத்தை தலையிலும், கைகளிலும் ஏந்தியபடி ‘தலைவா’ என்று உரக்க குரல் எழுப்பியபடி ஆர்ப்பரித்தனர். ரஜினிகாந்தும் காரில் இருந்து அவர்களை பார்த்து கைக்கூப்பியபடியே மண்டபத்துக்குள் சென்றார்.

    சரியாக 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு நிறைய அறிவுரைகளை ரஜினிகாந்த் வழங்கியதாக தெரிகிறது. குறிப்பாக அரசியல் கட்சி தொடங்கினாலும் மன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். கட்சி பொறுப்பு என்று வருகையில் மன்ற நிர்வாகிகள் ஒரு சிலரே தேர்வு செய்யப்படுவார்கள். அதைத்தவிர நல்லவர்களும் வெளியே இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். எனவே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தொடர்ந்து உற்சாகத்துடன் மன்ற பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    கூட்டத்தில் பேசிய 8 மாவட்ட செயலாளர்களும் சமீபத்தில் முஸ்லிம் மதகுருமார்களுடன், ரஜினிகாந்த் கலந்துரையாடி பேசியதை மக்கள் வரவேற்றுள்ளதாக தெரிவித்தனர். அதேபோல தேர்தல் நேரத்தில் கிறிஸ்தவ சமய தலைவர்களுடனும் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களையும் சந்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் அப்போது பதில் அளித்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் தனியாக களமிறங்குகிறோமா? அல்லது கூட்டணியா? என்று கேட்கும்போதும், ‘தேர்தல் வரட்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்னும் 2-3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    ‘நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. மேலும் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று வராமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி தான். அதற்கு முன்பு எப்போதுமே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவே இல்லையே... அப்படி நான் சொல்லியிருந்தால் அதை நிரூபித்து காட்டட்டுமே...

    மன்ற நிர்வாகிகள் நடவடிக்கைகளை நான் தொடர்ச்சியாக கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் பணியாற்றுவோரை நிச்சயம் நீக்குவேன். அப்படி நீக்கிவிட்டால் அவர்களை மீண்டும் பணியாற்ற அழைக்க மாட்டேன்’, என்றும் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முக்கியமாக மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை வழங்கும் தகவல்கள் வெளியே கசியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எப்படி ஒரு படத்தின் பெயரை ரகசியமாக வைத்திருந்து சரியான நேரத்தில் அதை வெளியிடுகிறோமோ, அது போல சில விஷயங்களிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது மன்றம் குறித்து மக்களின் பார்வை என்ன? மக்களுக்கு தேவையான விஷயங்கள் என்னென்ன? மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும்? நிர்வாகிகள் போக்கு எப்படி இருக்கிறது? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து கேட்டிருக்கிறார்.

    மேலும் மன்ற நிர்வாகிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மாற்றுக்கட்சியினர் நமது மன்றத்தில் இணைந்தால் கூட அவர்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த கூட்டத்தில் கட்சி எப்போது தொடங்குவது? கட்சி கொடி, சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பான பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கருத்து கேட்டதாகவும், அதற்கு நிர்வாகிகள் அளித்த கருத்து விவரங்களை அவர் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பிற்பகல் 12.10 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காரில் போயஸ் கார்டன் இல்லம் நோக்கி புறப்பட்டார்.

    Next Story
    ×