search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளத்தில் தடுமாறியபடி சென்ற பெண்கள்.
    X
    மழை வெள்ளத்தில் தடுமாறியபடி சென்ற பெண்கள்.

    நாகர்கோவில் நகரை ஸ்தம்பிக்க வைத்த கனமழை: 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்

    குமரி மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்திலேயே கனமழையாக மாறியது.100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 2.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. இடி-மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரத்திலேயே கனமழையாக மாறியது.

    மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்ததால் நாகர்கோவில் நகரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு உள்ளானது. இந்த மழை காரணமாக நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம்போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, கோட்டார், செட்டிக்குளம், பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, இந்துக்கல்லூரி சாலை, வடசேரி சாலை, பறக்கை சாலை என்று அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் சாலைகளை மூழ்கடித்தப்படி ஓடியது. 1 மணி நேரத்தில் 9½ சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. பல வாகனங்கள் மழை நீரில் சிக்கி செல்ல முடியா மல் ஆங்காங்கே நின்றதால் நகரின் பல இடங்களில் போக்குவரத்தும் ஸ்தம் பித்தது.

    மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவ-மாணவிகள் வீடு திரும்ப தயாராகி கொண்டிருந்தனர். கனமழை யால் அவர்கள் பள்ளி, கல்லூரிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றாலும் மழை வெள்ளம் வடிவதற்கு நீண்ட நேரம் ஆனதால் பெரும் சிரமத்துடனேயே மாணவ- மாணவிகள் வீடு திரும்பினர்.

    நாகர்கோவில் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளும் மழைக்கு தப்பவில்லை. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சில நிமிடங்களிலேயே வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீர் முழங்கால் அளவிற்கு உயர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

    ஒழுகினசேரி ஆராட்டு ரோட்டிலும் பல வீடுகளுக்குள் இதுபோல மழை வெள்ளம் புகுந்தது. மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள்ளும் மழை நீர் புகுந்தது. நாகராஜா கோவில் கிழக்கு வாசல் பகுதியிலும் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது.

    வடசேரியில் பெய்த கனமழையால் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவில் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் கோவில் வளாகம் குளம் போல காட்சி அளித்தது.

    நாகர்கோவில் நகரையே புரட்டிப் போட்ட மழை 1 மணி நேரத்தில் ஓய்ந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில மணி நேரங்கள் ஆனது.

    நகரில் பல பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய் களில் அடைப்பு ஏற்பட்டதால் ஒரு மணி நேர மழைக்கே நாகர்கோவில் நகரம் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நகரின்பல பகுதியில் உள்ள சாலைகள் இன்று சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதேபோல கொட்டாரம், மயிலாடி, மண்டைக்காடு, ஆணைக்கிடங்கு, திற்பரப்பு, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, சுசீந்திரம், செண்பகராமன்புதூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாகர்கோவில்-95.2, ஆணைக்கிடங்கு-82.2, சுருளோடு-7.4, கன்னிமார்-5.4, ஆரல்வாய்மொழி-1.3, மயி லாடி-29.2, கொட்டாரம்-6, இரணியல்-53, குளச்சல்-7, குருந்தன்கோடு-31.2, அடையாமடை-7, கோழிப் போர் விளை-20, புத்தன் அணை-2.4, திற்பரப்பு-8.2.

    Next Story
    ×