search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளையும், காளைகளை அடக்க முயன்ற வீரர்களையும் படத்தில் காணலாம்.
    X
    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளையும், காளைகளை அடக்க முயன்ற வீரர்களையும் படத்தில் காணலாம்.

    அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்

    அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயம் அடைந்தனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் உள்ள வயல் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டு தகுதியான காளைகளை தேர்வு செய்து டோக்கன் வழங்கினர். இதேபோல் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்களின் உடல் தகுதி சான்றுகளையும் டாக்டர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் நடந்த ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஆத்தூர், சேலம், தம்மம்பட்டி, மல்லியகரை, வீரகனூர், கெங்கவல்லி, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், விசுவக்குடி, சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 622 காளைகள் கலந்து கொண்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 348 பேர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

    இதில் பார்வையாளர்கள் கைத்தட்டி மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×