search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தென்காசி மாவட்டத்தில் பிப்ரவரி மாத மழையளவு இயல்பைவிட 81 சதவீதம் குறைவு

    தென்காசி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 15.64 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 81 சதவீதம் குறைவாகும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.80 மி.மீ. பிப்ரவரி மாதம் வரை இயல்பான மழை அளவு 80.4 மி.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15.64 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 81 சதவீதம் குறைவாகும். அணைகளில் நீர் இருப்பு அவற்றின் கொள்ளளவில் 27 சதவீதம் உள்ளது.

    மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 35 ஆயிரத்து 802 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 16 ஆயிரத்து 941 ஹெக்டேர் பரப்பிலும், பயறுவகை பயிர்கள் 33 ஆயிரத்து 832 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 2 ஆயிரத்து 978 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 2 ஆயிரத்து 26 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 914 ஹெக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 92 ஆயிரத்து 943 ஹெக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நெற்பயிர் அறுவடை முடிந்த நிலையிலும், அறுவடை நிலையிலும் உள்ளது. பயறுவகை பயிர்களான உளுந்து, பாசிப்பயிறு ஆகியவை அறுவடை முடிந்த நிலையிலும், மக்காச்சோள பயிர் அறுவடை நிலையிலும் உள்ளது. ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் உர விற்பனையை கண்காணிக்கும் பொருட்டு வேளாண்மை உதவி இயக்குனரால் திடீர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுவதற்கான முகாம் நடைபெற்று வருகிறது. பாரத பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை ரூ.6 ஆயிரம் பெறும் விவசாயிகள் தாங்கள் ஊக்கத்தொகை பெறும் அதே வங்கியில் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்துகொள்ளும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், பிரதம மந்திரியின் ஊக்கத்தொகை வரவு பெற்றுள்ள வங்கி புத்தக நகல், பட்டா நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கிசான் கடன் அட்டை பெறும் விவசாயிகளுக்கு வங்கிகளில் எவ்வித பிணையமுமின்றி ரூ.16 லட்சம் பயிர்கடனும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கு ரூ.2 லட்சம் வரையில் கடனும் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் கடன் பெறும் விவசாயிகள் முறையாக கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில் 4 சதவீதம் வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×