search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா - கருணாநிதி
    X
    ஜெயலலிதா - கருணாநிதி

    கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களின் இழப்புகளை சந்தித்த 15வது தமிழக சட்டசபை

    கருணாநிதி, ஜெயலலிதா இருபெரும் தலைவர்களுடன் 8 எம்.எல்.ஏ.க்களின் இழப்பை 15-வது சட்டசபை சந்தித்துள்ளது.
    சென்னை:

    15-வது சட்டசபை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புடன் 2016-ம் ஆண்டு மே 21-ல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களை வென்றது. மீண்டும் ஆட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழக அரசியலில் இத்தகைய சாதனையை ஜெயலலிதா படைத்தார்.

    89 தொகுதியில் வெற்றி பெற்று அதிக பலத்துடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. கைப்பற்றியது. இவ்வாறு ஆரம்பமே அசத்தலாக தொடங்கிய தமிழக சட்டசபை சில துரதிருஷ்டவசமான இழப்புகளையும் எதிர்நோக்க தொடங்க இருப்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

    தமிழக சட்டசபை

    தமிழக அரசியல் வானில் இரு பெரும் தலைவர்களாக, மக்கள் நெஞ்சங்களை வென்றவர்களாக விளங்கிய ஜெயலலிதா, கருணாநிதியின் திடீர் மரண செய்திகள் தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவை உலுக்கி விட்டது. அந்த இருபெரும் தலைவர்களுடன் 8 எம்.எல்.ஏ.க்கள் மரண வாசலை அடைந்தது, சட்டசபை வரலாற்றில் கண்ணீர் துளிகளாக மாறி போய் உள்ளது.

    2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.சீனிவேல், வாக்குப்பதிவு நடந்த மறுநாளே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சுயநினைவு இன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தான் வெற்றி பெற்றதே தெரியாத நிலையில் மே மாதம் 25-ந்தேதி உயிரிழந்தார்.

    தி.மு.க. சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனை விட 22,992 வாக்குகள் அதிகம் பெற்ற சீனிவேல், தான் பெற்ற வெற்றியை அறியாமலேயே உயிரிழந்தது அ.தி.மு.க. வினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இங்குதான் 15-வது சட்டசபை தனது முதல் உறுப்பினரை இழந்தது.

    எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது இல்லை என்ற வரலாற்றை 2016-ல் மாற்றிக்காட்டி, தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை பரிசளித்த ஜெயலலிதா, டிசம்பரில் தங்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க விடுவார் என்று அவர்களே எதிர்பார்க்கவில்லை.

    சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா உடல்நலக்குறைவால் செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை முடிவில், டிசம்பர் 5-ந்தேதி காலமானார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த நேரத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் அ.தி. மு.க. வேட்பாளராக நின்று, வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று ஒரு ஆண்டு ஆன நிலையில் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி திடீரென மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். சீனிவேலுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதி தன்னுடைய 2-வது உறுப்பினரையும் இழந்தது.

    தனது சொந்த ஊரான திருவாரூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன தி.மு.க. தலைவர் கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஜூலை 28-ந் தேதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்டு 8-ந்தேதி அவர் மரணமடைந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடர்ந்து சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சூலூர் கனகராஜ் மாரடைப்பால் கடந்த ஆண்டு (2019) மார்ச் 3-ந்தேதி மரணம் அடைந்தார்.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராதாமணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டபோது, அந்த தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். கே.பி.பி.சாமியின் இறுதிச்சடங்கு நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் நேற்று மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்.

    குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வான காத்தவராயன் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவர் குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

    2016-ம் ஆண்டில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் கருணாநிதி, ஜெயலலிதா, சீனிவேல், ஏ.கே.போஸ், கனகராஜ், ராதாமணி, கே.பி.பி.சாமி, காத்தவராயன் உள்ளிட்ட 8 எம்.எல். ஏ.க்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆவர். திருப்பரங்குன்றத்தில் சீனிவேல், ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவால் 2 முறை இடைத்தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் (அ.தி. மு.க.), குடியாத்தம் காத்தவராயன் (தி.மு.க.) ஆகியோர் மரணத்தை தழுவியுள்ளனர்.

    இப்படி அதிக எம்.எல்.ஏ.க் கள் மரணம் அடைந்திருப்பது இந்த 15-வது சட்டசபையில் மட்டும் தான். இந்த துரதிருஷ்டவசமான உயிர் இழப்புகள் இனியும் தொடரக்கூடாது என்பது தான் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது.


    Next Story
    ×