search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் தங்கி உள்ள தமிழக மீனவர்கள்.
    X
    ஈரானில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் தங்கி உள்ள தமிழக மீனவர்கள்.

    கொரோனா பீதியால் விமான சேவை நிறுத்தம்- ஈரானில் தவிக்கும் 700 குமரி மீனவர்கள்

    கொரோனா வைரஸ் பீதியால் ஈரானில் விமான சேவை நிறுத்தப்பட்டதால், குமரி மாவட்ட மீனவர்கள் 700 பேர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது.

    இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது வளைகுடா நாடுகளிலும் பரவி வருகிறது. அங்கிருந்து ஈரான் நாட்டிற்கும் பரவி, பலரையும் காவு வாங்கி வருகிறது.


    ஈரானில் மட்டும் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். 139 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஈரானுக்குச் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து 900-க்கும் அதிகமான மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்ய ஈரான் நாட்டில் தங்கி உள்ளனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈரானின் சீரா துறைமுகத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவதை அறிந்ததும், குமரி மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப திட்டமிட்டனர். இதற்காக மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களிடம் அனுமதியும் பெற்றனர்.

    ஈரானில் இப்போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல கப்பல் சேவையும் செயல்படாததால், குமரி மீனவர்கள் உள்பட நாடு திரும்பவேண்டும் என்று விரும்பிய தமிழர்கள் அனைவரும் ஈரானிலேயே, தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர் சகாய அஸ்கர் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானில் நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருக்கும் பகுதிக்கு இன்னும் பரவவில்லை. கொரோனாவின் பாதிப்பு இங்கு வரும் முன்பு இந்தியா திரும்பிவிட முடிவு செய்தோம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700 மீனவர்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப தயாரானோம்.

    நாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், நாங்கள் அனைவரும் ஊர் திரும்ப அனுமதித்து விட்டனர். ஆனால் நாடு திரும்ப விமானங்கள் இல்லை. இது பற்றி இந்திய தூதரகத்திடம் கேட்டால், சரியான பதில் கிடைக்கவில்லை.

    இதனால் நாங்கள் மீன்பிடி துறைமுகத்தில் நிற்கும் படகுகளிலேயே தங்கி உள்ளோம். எங்களிடம் இருக்கும் உணவு பொருட்கள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. உணவு தீர்ந்து போனால் எங்கள் நிலை இன்னும் மோசமாகும். அதற்குள் எங்களை இங்கிருந்து மீட்டுச் செல்ல வேண்டும். தனி விமானம் மூலம் எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு சமூக வலைதளங்களில் அவர் உருக்கமாக உதவி கேட்டுள்ளார்.

     

    கொரோனா வைரஸ்

    ஈரான் நாட்டில் குமரி மீனவர்கள் தவித்து வரும் தகவல் அறிந்து, அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த ஜெலஸ்டின்மேரி கூறியதாவது:-

    எனக்கு அருண்பிரசாத் (வயது27), ஜார்ஜ் விஜயன்(25) என்று 2 மகன்கள் உள்ளனர். அருண்பிரசாத் ஓராண்டுக்கு முன்பே ஈரான் சென்று மீன் பிடி தொழில் செய்து வந்தார். ஜார்ஜ் விஜயன் சில நாட்களுக்கு முன்பு தான் ஈரான் சென்றார். அவர் அங்கு போய் சேர்ந்த சில நாட்களிலேயே, கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது.

    இப்போது ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவல் வந்துள்ளது. அரசு தான் அவர்களை மீட்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    எனது மகன் சகாயதினேசும் ஈரானில் உள்ளார். அவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் தான் ஆகிறது. திருமணத்திற்கு பிறகு வேலைக்காக ஈரான் சென்றார். இப்போது அங்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளதாக, கூறியுள்ளார். அவரை அங்கிருந்து விரைவில் மீட்டு வர வேண்டும் என்றார்.

    மீனவர் ஒருங்கிணைப்பு சங்க செயலாளர் சார்லஸ் ஜாண்சன் கூறியதாவது:-

    ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் பற்றிய தகவலை சென்னையில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர், என்பதை கணக்கெடுத்து வருகிறோம்.

    விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர முடியாவிட்டால், கடல் மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.

    ஈரானில் தமிழக மீனவர்கள் தவித்து வருவது பற்றி சென்னையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் சமீரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் விபரம் கேட்டுள்ளோம். ஓரிரு நாளில் இது பற்றிய அறிக்கை கிடைக்கும். அதன் பிறகு வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு ஈரானில் தவிக்கும் மீனவர்களை, விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யும் படி கோருவோம், என்றார்.

    Next Story
    ×