search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 வயது குழந்தை ஜெர்மையா டெனி
    X
    3 வயது குழந்தை ஜெர்மையா டெனி

    பள்ளிக்கூடம் செல்லாமலே அனைத்து மாநில தலைநகரங்களையும் சொல்லும் 3 வயது குழந்தை

    சென்னை அருகே 53 விநாடியில் அனைத்து மாநில தலைநகரங்களையும் கூறிய 3 வயது குழந்தை பெயர் இந்திய சாதனை பட்டியலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் நடந்த சாதனையாளர் நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 வயது குழந்தையை பார்க்க பார்வையாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். மேடையில் நின்ற குழந்தையை பார்க்க முடியாமல் அவனை தூக்கி காட்டுங்கள் என்று கோரசாக குரல் எழுப்பினார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டதும் அரங்கமே ஆரவாரம் செய்தது.

    வயது 3, இன்னும் 3 அடி கூட வளரவில்லை. பால் மணம் மாறாத மழலை குழந்தை. இதுவா சாதனை செய்ய போகிறது என்று கூட்டத்தினரிடம் ஆச்சரியம்.

    அவன் பெயர் ஜெர்மையா டெனி.

    உனக்கு எல்லா மாநிலங்களின் தலைநகரமும் தெரியுமா.. என்றதும் ம்ம்.. என்று தலையை ஆட்டினான்.

    எங்கே சொல்லு பார்க்கலாம் என்றதும் தமிழ்நாடு- சென்னை, கேரளா- திருவனந்தபுரம்... என்று மளமள என்று 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களின் பெயர்களை 53 விநாடிகளில் சொல்லி முடித்தான்.

    அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கலாம்-2020 என்ற விருது வழங்கப்பட்டது.

    இந்திய சாதனை பட்டியலுக்காக ஜெர்மையா டெனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை மற்றும் அவரது தாய்

    இன்னும் பள்ளிக்கூடத்தில் கூட டெனி சேர்க்கப்படவில்லை. அதற்குள் எப்படி இவ்வளவு ஆற்றல்? என்பதை தாய் டென்னிதாவிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:-

    நான் பி.டெக் முடித்து விட்டு வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் மார்கெட்டிங் வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரே குழந்தைதான். குடும்ப பிரச்சினையால் என் பெற்றோருடன் அய்யப்பன்தாங்கலில் வசிக்கிறேன்.

    டெனியை மடியில் வைத்துக்கொண்டு ஏதாவது ரைம்ஸ் சொல்லித் தருவேன். ஒரு நாள் இதே போன்ற சாதனையை ஒரு நிமிடம் 40 விநாடிகளில் ஒரு குழந்தை செய்திருந்ததை பார்த்து நீயும் சொல்வியா என்று கேட்டேன் சரி என்றான்.

    ஒவ்வொரு மாநிலமாக சொல்லி கொடுத்தேன். அவனும் ஆர்வமாக கேட்டு திருப்பி சொன்னான். ஆனால் 53 விநாடிகளில் சொல்லி சாதனை படைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

    அடுத்த ஆண்டு எல்.கே.ஜி. வகுப்பில சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவனது திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவனுக்கு பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
    Next Story
    ×