search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த கூடாது - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் தீர்மானம்

    தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த கூடாது என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சென்னை:

    தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் இதுவரை இல்லாதபடி குடியுரிமை வி‌ஷயத்தில் மதத்தை புகுத்தியுள்ளது. இது “மதச்சார்பற்ற குடியரசு” எனும் நமது அரசியல் சாசன மாண்பை சீர்குலைத்துள்ளது. அதிலும் ஆறு மதங்களைக் குறிப்பிட்டு இஸ்லாமை மட்டும் விட்டு விட்டது.

    மதரீதியான பாகுபாடு என்றால், மூன்று நாடுகளைக் குறிப்பிட்டு இலங்கை, பூடான் போன்ற நாடுகளை விட்டுவிட்டது நாடுரீதியான பாகுபாடு. இதனால் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த அநீதியான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.

    என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை ஏப்ரல் முதல் அமல்படுத்தப்போகிறது மத்திய அரசு. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்போது இது தேவையே இல்லாதது.

    என்.பி.ஆர். என்பது என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான முன்தயாரிப்பு ஆகும். என்.பி.ஆர். தயாரிக்கப்பட்டு அதிலிருந்து என்ஆர்சி தயாரிக்கப்படும் என்று 2003-ல் பா.ஜ.க. ஆட்சியில் வகுக்கப்பட்ட குடியுரிமை விதிகள் தெளிவாகக் கூறியுள்ளன.

    எனவே என்.பி.ஆர். வந்தாலே என்ஆர்சி வரப்போகிறது என்றுதான் பொருள். ஆதார் போன்றவை இருக்கும்போது இந்த என்.ஆர்.சி. முற்றிலும் அவசியமற்றது. ஆனாலும் அவர்கள் இதைக்கொண்டு வருவதன் நோக்கம் மதச்சிறுபான்மையோர், நலிந்தபிரிவினர் மற்றும் கொள்கை மாறுபாடு கொண்டவர்களின் குடியுரிமையை பறிப்பதாகும்.எனவே இவற்றை வன்மையாக எதிர்ப்பதோடு, இவற்றைக் கைவிட வேண்டும்.

    சி.ஏ.ஏ.யை மாநிலங்களவையில் ஆதரித்து மாபெரும் வரலாற்றுப்பிழையைச் செய்துள்ளது தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. இதனுடைய ஆதரவு இல்லையென்றால் அந்த மசோதா சட்டமாகியிருக்காது, நாடு முழுக்க மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

    தனது தவறை உணர்ந்து இப்போதாகிலும் சரியான நிலை எடுக்க வேண்டும், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். கேரளாவும், புதுவையும் அத்தகைய தீர்மானத்தை நிறை வேற்றி இந்தியாவிற்கே முன்னு தாரணமாகத் திகழ்வதை மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

    தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமலாக்கக்கூடாது என்று தமிழக அரசை இந்த மாநாடு வற்புறுத்துகிறது. அவ்வாறே, என்.பி.ஆரின் நீட்சியாகிய என்.ஆர்.சி.யை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனும் கொள்கை முடிவையும் அது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

    மார்ச் மூன்றாவது வாரத்தில் ஒரு தேதியில் 24 மணி நேர தொடர் இருப்பு போராட்டத்தை நடத்துவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது. முதல்நாள் காலை பத்து மணிக்கு துவங்கும் இந்தப் போராட்டம் மறுநாள் காலை பத்து மணிக்கு முடியும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×