search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயனாளிகளுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கியபோது எடுத்த படம்
    X
    பயனாளிகளுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கியபோது எடுத்த படம்

    பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

    நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 150 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    ஊரகப்பகுதிகளில் வாழும் ஏழை பெண்களுக்கு ஊரக கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான ‘‘அசில் நாட்டின கோழிக்குஞ்சுகள்’’ வழங்கும் திட்டத்தை, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசு சார்பில், ‘‘ஊரக புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டம்’’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கப்படும். இதற்கான பயிற்சியின்போது ஊக்கத்தொகை மற்றும் புத்தக கட்டணம் சேர்த்து ரூ.2,015 மதிப்பில் மொத்தம் 5,175 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 150 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கோழிக்குஞ்சுகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து அந்தந்தப்பகுதி கால்நடை மருத்துவர்களால் ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.150 ஊக்கத்தொகையும், விளக்க கையேடும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ம.கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிரு‌‌ஷ்ணன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் தானே‌‌ஷ் என்கிற முத்துகுமார், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மார்கண்டேயன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ் (கரூர்), தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, கூட்டுறவு சங்க பிரதிநிதி என்ஜினீயர் கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×