search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    சென்னையில், நாளை மறுநாள் கோட்டை நோக்கி பா.ஜனதா பேரணி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து சென்னையில் நாளை மறுநாள் பாரதிய ஜனதா சார்பில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
    சென்னை:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. இது தொடர்பாக நடைபெறும் போராட்டங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நாளை மறுநாள் (28-ந்தேதி) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறது.

    குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோட்டையை நோக்கி நாளை மறுநாள் பா.ஜனதாவினர் முற்றுகையில் ஈடுபடுகிறார்கள்.

    இல.கணேசன்

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகில் சென்னையைச் சேர்ந்த 7 மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரளாக இதில் கலந்து கொள்கிறார்கள்.

    மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர் ஜெய்சங்கர், நடிகர் ராதாரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழகத்தில் மற்ற பகுதிகளில் கலெக்டர் அலுவலகங்களை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

    நெல்லையில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், தூத்துக்குடியில் மகளிர் அணி தேசிய பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரி தலைமையிலும் போராட்டம் நடக்கிறது.

    கோவையில் நடைபெறும் போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனும், திருப்பூரில் நடைபெறும் போராட்டத்துக்கு முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த போராட்டம் கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் மட்டும் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி போராட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

    தென்காசியில் நடைபெறும் போராட்டத்துக்கு தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×