search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    மாநிலங்களவை எம்.பி. பதவியை பெற அதிமுக-திமுகவில் கடும் போட்டி

    புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை பெற அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது.

    சென்னை:

    மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்களாக உள்ள ஏ.கே.செல்வராஜ், முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (இப்போது பா.ஜனதா உறுப்பினர்) ஆகியோரது பதவி காலம் வருகிற ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலமும் முடிவடைகிறது.

    இதேபோல் இந்தியா முழுவதும் 55 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. காலியாகும் இந்த பதவிகளில் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    புதிய மாநிலங்களவை எம்.பி.க்களை அந்தந்த சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். தமிழகத்தில் 234 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் அ.தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    பாராளுமன்றம்

    இதில் ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க. வில் இருந்து 3 எம்.பி.க்களும் தி.மு.க.வில் இருந்து 3 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடியும்.

    இந்த முறை அ.தி.மு.க.வில் எம்.பி. பதவியை பெற முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்.பி.க்கள் மைத்ரேயன், அன்வர்ராஜா ஆகியோர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் எம்.பி. பதவிக்கு ‘காய்’ நகர்த்தி வருகிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவருக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கும் எம்.பி.பதவி கிடைக்கும் 3-வது நபர் புதுமுகமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    அந்த வகையில் கோகுல இந்திராவுக்கு எம்.பி.சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மற்ற 2 பேரை தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    தி.மு.க.வில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என தெரிகிறது. மீதம் உள்ள 2 இடங்களுக்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா? அல்லது புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பது போக போக தெரியும்.

    Next Story
    ×