search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
    X
    தமிழகத்தில் 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

    தமிழகத்தில் 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

    தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7 ஆயிரத்து 648 பேர் 58 வயதை கடந்தும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
    சென்னை :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர தற்போது 18 மாதங்கள் சிறப்பு சலுகையும் அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 59 ஆயிரத்து 474 பேர். அதேபோல் 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 13 லட்சத்து 55 ஆயிரத்து 685 பேர் பதிவு செய்து உள்ளனர். 24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 160 பேராகும்.

    அதேபோல் 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 11 லட்சத்து 29 ஆயிரத்து 472 பேர். 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 648 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். ஆக மொத்தம் 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 66 ஆயிரத்து 303, பெண்கள் 35 ஆயிரத்து 644 உள்பட 1 லட்சத்து ஆயிரத்து 947 பேர். பார்வையற்ற ஆண்கள் 10 ஆயிரத்து 994 பேரும், பெண்கள் 4 ஆயிரத்து 938 பேர் உள்பட 15 ஆயிரத்து 932 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 365 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 415 பேர் உள்பட 13 ஆயிரத்து 780 பேர் பதிவு செய்துள்ளனர். ஆக மொத்தம் மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 86 ஆயிரத்து 662 பேரும், பெண்கள் 44 ஆயிரத்து 997 பேர் உள்பட 1 லட்சத்து 31 ஆயிரத்து 659 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைகளுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    இவர்களுக்கு அவ்வப்போது தனியார் துறைகள் சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்புகளிலும் பங்கேற்க செய்து பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×