search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில தேர்தல் ஆணையம்
    X
    மாநில தேர்தல் ஆணையம்

    புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஏப்ரலில் தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொது மக்கள் பார்வைக்காக பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு இது தொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 9 மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தும் வகையில் அனைவரும் தேர்தல் பணியை முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இப்போது நடைபெறும் பணிகளை பார்க்கும் போது 9 மாவட்டங்களுக்கு மட்டும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்தும் அறிகுறி இல்லை என்று தெரிகிறது.

    Next Story
    ×