search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    பல்லடம் வங்கியில் 1200 பவுன் நகை, ரூ.19 லட்சம் கொள்ளை

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் வங்கியில் 1200 பவுன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் கள்ளிப்பாளையத்தில் ஸ்டேட் வங்கி கிளை உள்ளது.

    இந்த வங்கியில் கள்ளிப்பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து இருந்தனர். மேலும் விவசாயிகள் பலர் 5 பவுன் முதல் 50 பவுன் வரை தங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்தனர்.

    சனி, ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் நேற்று காலை ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர்.

    அப்போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதன் கம்பிகள் உடைந்து இருந்தது. மேலும் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் லாக்கர் இருந்த அறையை பார்த்தனர். அப்போது லாக்கர் வைத்திருந்த சுவர் உடைக்கப்பட்டு இருந்தது.

    அங்கிருந்த 31 லாக்கர் உடைந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம் கொள்ளை போய் இருந்தது. 1,200 பவுன் நகை, ரூ. 19 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமிரா ஹார்டு டிஸ்குகளையும் கொள்ளையர்கள எடுத்து சென்று விட்டனர்.

    இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் வங்கிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது.

     மோப்பநாய் உதவியுடன் போலீசார் துப்பறிந்த போது எடுத்த படம்.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்கு பிளேடு, கையுறை, பர்தா ஆகியவை கிடந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க கட்டிங் பிளேடுகளை பயன்படுத்தி உள்ளனர்.

    அதற்கு மின் இணைப்பு கொடுத்து லாக்கரை உடைத்துள்ளனர். வங்கியில் 50-க்கும் மேற்பட்ட பிளேடுகள் கிடந்தது.

    ஸ்டேட் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கொள்ளையர்கள் துண்டித்து அதன் ஹார்டு டிஸ்குகளை திருடி சென்று விட்டதால் கொள்ளையர்களின் உருவத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளை போன வங்கியின் அருகில் மில் உள்ளது. அதன் முன்பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 22-ந்தேதி நள்ளிரவு கொள்ளையர் இருவர் ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கிக்குள் நுழைவதும், ஒரு மணி நேரத்துக்கும் மேல் வங்கிக்குள் இருந்த அவர்கள் பின்னர் 2 பையுடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகி உள்ளது.

    அந்த பகுதி இருட்டாக இருந்ததால் கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் முகங்கள் சரியாக பதிவாகவில்லை.

    இந்த கொள்ளை ஒரு மணி நேரத்தில் நடைபெற்று இருக்க வாய்ப்பு இல்லை. வங்கி ஜன்னல், லாக்கரை உடைக்க அதிக நேரமாகி இருக்கும். இதனால் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கொள்ளையர்கள் அங்கு தங்கியிருந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அல்லது முதல் நாள் கொள்ளையன் ஒருவன் வந்து வங்கி ஜன்னலை உடைத்து வழி ஏற்படுத்தி இருக்கலாம். அடுத்த நாள் கொள்ளையர்கள் கும்பலாக வந்து லாக்கரை உடைத்து பணம், நகையை அள்ளி சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.

    கொள்ளை நடைபெற்ற வங்கி உள்ள பகுதியில் வீடுகள் மற்றும் கடைகள் எதுவும் கிடையாது. இதனால் கொள்ளையர்கள் சர்வசாதாரணமாக கைவரிசை காட்டி உள்ளனர்.

    இந்த வங்கியில் இரவு காவலாளி இல்லை. கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி இதே வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    கடந்த முறை கொள்ளை முயற்சி நடைபெற்ற போது போலீசார் வங்கி நிர்வாகத்திடம் இரவு காவலாளி நியமிக்கும் படி அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் வங்கி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த முறை திட்டமிட்டு வந்த கொள்ளையர்கள் தாங்கள் நினைத்த படி துல்லியமாக கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த வங்கியில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 5 பேர் பணியாற்றி வருகிறார்கள். மேலும் தற்காலிக ஊழியர்களாக 2 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சுவரை துளையிட்டு திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை நடத்தி உள்ளதால் இதில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    வங்கியில் கொள்ளை போனதால் லாக்கரில் நகைகளை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×