search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜல்லிக்கட்டில் 20 காளைகளை பிடித்த மதுரை வாலிபருக்கு கார் பரிசு

    கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் 20 காளைகளை பிடித்த மதுரை வாலிபருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
    கோவை:

    கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் செட்டிப்பாளையத்தில் -3 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா நடந்தது.

    இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து 940 காளைகளும், 754 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

    போட்டிகள் முடிந்த பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 20 காளைகளை பிடித்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் (25) என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

    19 காளைகளை பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்தி (27) என்பவருக்கு 2-ம் பரிசாக மோட்டார் சைக்கிளும், 10 காளைகளை பிடித்த மதுரையை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு 3-ம் பரிசாக மொபட்டும் வழங்கப்பட்டது.

    இதே போல வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களான மாநில ஜல்லிக்கட்டு சங்க தலைவர் ராஜசேகருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்டம் அய்யமபட்டி ஆண்டிசாமி கோவில் காளை, சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, நெல்லை மாவட்டம் அய்யனார்குளம் ராக்காயி கோவில் காளை ஆகிய மூன்றும் ஒரே புள்ளிகளை பெற்றதால் 3 காளைகளின் உரிமையாளர்களுக்கும், 2, 3-வது பரிசுகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் தலா 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    இந்த பரிசுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத், எம்.எல்.ஏ.,க்கள் எட்டிமடை சண்முகம், கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநில ஜல்லிக்கட்டு சங்க தலைவர் ராஜசேகர், கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி. அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள துள்ளுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சுபாஷ் (25) என்பவர் மார்பில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட மருத்துவ குழுவினர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் காளைகள் முட்டியதில் விருதுநகர் மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த கனகராஜ் (28), அலங்காநல்லூரை சேர்ந்த பிச்சுமணி (35) உள்பட 30 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் படுகாயம் அடைந்தவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×