search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு விட்டது- ப.சிதம்பரம்

    சர்வதேச நாடுகள் மத்தியில் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் உள்ள கேரள சமாஜம் அமைப்பு சார்பில் ‘அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப் போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தேசிய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை கொண்டு வந்திருப்பது அவசியமற்றது. இப்போது அதற்கு எந்த தேவையும் இல்லாத நேரத்தில் இப்படி ஒன்றை கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    தேசிய குடிமக்கள் பதிவேட்டில் நமது மூதாதையர்களுடைய விவரங்களை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் என்ன? பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் போன்றவற்றின் விவரங்கள் ஏன் தேவை.

    இதுபோன்ற தகவல்களை திரட்டி பலரை நாடற்றவர்களாக ஆக்க முயற்சிக்கிறார்கள். அதாவது பலர் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக இதை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

    மத்திய பாரதிய ஜனதா அரசு ஒரு மோசமான செயலை இதன்மூலம் உருவாக்கப்பார்க்கிறது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக நாட்டு மக்களை மதரீதி யாக பிரித்துள்ளனர். இந்தியாவுக்கு உலக அளவில் தனியாக நற்பெயர் உண்டு. அதை அழிக்கும் வகையில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று பல நாடுகள் இதுபற்றி கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் இந்தியாவின் நற்பெயர் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    நமது மந்திரிகள் எல்லாம் இந்த வி‌ஷயத்தை பற்றி பொய் சொல்கிறார்கள். குடியுரிமை சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியுள்ளனர். அவ்வாறு எந்த இந்தியர்களும் பாதிக்கப்படவில்லை என்றால் எதற்காக இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

    இந்த சட்டத்தால் யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு, சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் ஏன் லட்சக்கணக்கான மக்கள் இன்று தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் கோர்ட்டு இந்த வி‌ஷயத்தை வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

    இந்த சட்டங்கள் மூலம் யார் பாதிக்கப்படுவார்கள், யார் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை பதிவேடு, மக்கள் பதிவேடு போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் கொண்டு வந்ததில் 19 லட்சம் பேர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் எப்படி நாட்டை விட்டு வெளியேற்றுவீர்கள். அவர்களை எங்கே அனுப்புவீர்கள்.

    ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றுவது வாடிக்கையானது. ஆனால் இப்படி 19 லட்சம் பேர் நாடற்றவர்கள் என்று வேறு எங்கேயும் அறிவித்தது இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் டிரம்பிடம் கூட மோடி கேட்டுக்கொள்ளலாம்.

    டிரம்ப் கூட அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய மெக்சிக்கோ மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் இதுவரை ஒருவரை கூட அவர் வெளியேற்ற முடியவில்லை.

    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டங்களை தொடங்கி இருக்கிறார்கள். இது அவர்கள் இறுதி மூச்சுவரை தொடரும். இந்த வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை செல்லாததாக அறிவிக்கும்.

    இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.

    Next Story
    ×