search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கினார்.
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கினார்.

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஜெயலலிதாவின் உயர்ந்த சேவையினை நினைவு கூரும் வகையில், அவரது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ஆக அனுசரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு மாநில விருது வழங்கப்படும்.

    இந்த ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது, போ‌ஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண் தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டதற்காக, கடலூர் மாவட்டம், மாலுமியர் பேட்டையைச் சார்ந்த 9 வயது சிறுமி பவதாரணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாநில அரசின் விருதிற்கான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி பாராட்டினார்.

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டு தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து, தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×