search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா
    X
    ஜெயலலிதா

    ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.
    சென்னை :

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

    அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று நடுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி

    அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோட்டையில் நடைபெறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    சென்னை மாவட்டம் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடக்கிறது. பகல் 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இதேபோல், காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஜெயலலிதா சிலைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பும் வழங்க உள்ளனர். ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலரும் வெளியிடப்படுகிறது.
    Next Story
    ×